நிலவும் மழை நிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
தற்போது நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை தொடர்பில் அறிவிப்பை விடுத்துள்ளதாகவும் அந்த மத்திய நிலையத்தின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் இது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“விசேடமாக மண்சரிவுக்கான அறிகுறிகள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள். உங்கள் பகுதியில் மரங்கள், மின் கம்பங்கள் போன்றவை சாய்ந்தால், நிலத்தில் ஏற்படும் வெடிப்புகள், சேறு கலந்த புதிய நீரூற்றுகள் தோன்றுதல் மற்றும் இருக்கின்ற நீரூற்றுகள் வற்றிப்போதல் போன்றவற்றில் விசேட கவனம் செலுத்துவதுடன், இந்த அறிகுறிகளைக் கண்டவுடன் அப்பகுதிகளில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவது மிகவும் முக்கியமானது” என அவர் தெரிவித்துள்ளார்.







