இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 செப்டெம்பர் 26ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும், துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.

பணவீக்கமானது, நடுத்தர காலத்தில் 5 சதவீதம் கொண்ட இலக்குடன் இசைந்து செல்வதனை உறுதிசெய்கின்ற அதேவேளை, பொருளாதாரம் அதன் அதிகபட்சமான உள்ளார்ந்த ஆற்றலினை அடைவதை இயலச்செய்யும் நோக்கில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் மீதான அண்மைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சாத்தியமான இடர்நேர்வுகள் மற்றும் நிச்சயமற்றதன்மைகள் என்பவற்றினைக் கவனமாக கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

அடுத்த சில காலாண்டுகளில் பணவீக்கமானது 5 சதவீதம் கொண்ட இலக்கிற்கு மிகவும் கீழாகத் தொடர்ந்தும் காணப்பட்டு, நிர்வாக ரீதியாக நிர்ணயிக்கப்படும் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நிரம்பல் நிலைமைகளின் மெதுவடைதல் என்பனவற்றினால் தூண்டப்பட்டு மிக நெருங்கிய எதிர்காலத்தில் பணச்சுருக்கத்தினை பதிவுசெய்யக்கூடுமென்பதனைச் குறித்த சபை அவதானத்தில் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here