எந்தவித பாதுகாப்பு முன்னாயத்தமும் இன்றியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கப்பட்டதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
இதுவொரு அரசியல் பழிவாங்கல் செயற்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்ற ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை என்றும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை , கோரப்படும் எந்த சந்தர்ப்பத்திலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராமயில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தைக் கையளிக்க தயாராகவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது எமது சொந்த குடியிருப்பு அல்ல.
அத்துடன், உத்தியோகபூர்வ இல்லம் என்பது முன்னாள் ஜனாதிபதிகளுக்குப் பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ளவையாகும்.
எவ்வாறிருப்பினும், அந்த இல்லத்தை தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு யாருக்காவது விற்க வேண்டிய தேவை இருந்தால், அதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அங்கிருந்து வெளியேற்ற நினைத்தால் அதனை நாம் எதிர்க்கப் போவதில்லை.
ஆனால் அதனை உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.
காரணம் அந்த உத்தியோகபூர்வ இல்லம் பலவந்தமாகப் பெற்றுக் கொண்டதல்ல.
அரசியலமைப்பு ரீதியாகக் கிடைக்கப் பெற்றதாகும்.
இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட நியதியுமல்ல.
உலகில் எந்தவொரு நாட்டிலும் இந்த நடைமுறையே காணப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரமின்றி, சகல முன்னாள் அரச உத்தியோகத்தர்களுக்கும் இது பொருந்தும்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு என்பது சிறப்புரிமை அல்ல, அது உரிமையாகும்.
எனவே, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.








