யாழ்ப்பாணத்தில் அடுத்த வருடம் மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
கொழும்புக்கு அப்பால் பொது போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் சேவையை நடைமுறைப்படுத்துவது மற்றும் பொருத்தமான வழித்தடங்களை தேர்வு செய்வது குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாகாண போக்குவரத்து அதிகாரசபை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட அரச நிறுவனங்களுடன் ஆரம்ப கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
முன்மொழியப்பட்ட வழித்தடங்களின் பொருத்தத்தை மதிப்பிட சோதனை ஓட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. 2027 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் மெட்ரோ பஸ் சேவையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதேவேளை, மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்தின் இரண்டாம் கட்டத்திற்கு கண்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கண்டியில் ஒரு மாத சோதனை சேவை நடத்தப்பட்டு பொருத்தமான வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மெட்ரோ பஸ் சேவை முதலில் கொழும்பில் 10 பஸ்களுடன் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 122 பஸ்களாக விரிவுபடுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
நாட்டின் ஏனைய முக்கிய நகரங்களுக்கும் மெட்ரோ பஸ் சேவையை விரிவுபடுத்த 2029 வரையிலான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.








