இலங்கையில் ஆளில்லா பயணிகள் போக்குவரத்து ட்ரோன் சேவையை ஆரம்பிப்பதற்கான முதல் கட்டமாக, அதன் முதல் அதிகாரப்பூர்வ சோதனை இன்று (11) கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக சீனாவின் Yi Hang யி ஹாங் நிறுவனம் தயாரிக்கும் eVTOL வகை பயணிகள் ட்ரோன் பயன்படுத்தப்படவுள்ளது.

ஓடுபாதை இன்றி செங்குத்தாக மேலே எழும்பி இறங்கக்கூடிய இந்த விமானங்களை பயணிகள் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் அவசர சேவைகளுக்கு பயன்படுத்துவது குறித்து கடந்த ஓகஸ்ட் மாதம் துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த திட்டம் முதலில் வணிக சேவையாக அல்லாமல் சோதனை திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். சுமார் 6 மாதங்கள் கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சோதனைகள் நடத்தப்படும்.

இதற்காக 2 பயணிகள் பயணிக்கக்கூடிய E216 வகை ட்ரோன் அண்மையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

16 புரோபெல்லர்ஸ் (Propellers), 12 (பேட்டரி) மின்கலம் தொகுப்புகள் மற்றும் 3 விமான கட்டுப்பாட்டு அமைப்புகளை கொண்ட இந்த விமானம் கணினி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஒரு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து (தொலைவில்) இதனை இயக்க முடியும். விபத்து அல்லது தொடர்பு துண்டிப்பு ஏற்பட்டால் தானாகவே பாதுகாப்பு நடவடிக்கைக்கு மாறும் வசதியும் இதில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு, விமானப்படை உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்த சேவை நடைமுறைக்கு வரும் பட்சத்தில், சிகிரியா, பிதுரங்கல மற்றும் தீவு பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு வான் வழியாக சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல புதிய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here