யாழ்ப்பாணத்தில் தனது காணியை விற்றுப் பெற்ற பணத்தை கொண்டுசென்ற நபரை இருவர் வழிமறித்து ஒரு கோடி ரூபாய் பணம், கையடக்கத் தொலைபேசி கடவுச்சீட்டு முதலியவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் காணி விற்பனை தரகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
யாழ்ப்பாணம், சங்குவேலி பகுதியைச் சேர்ந்த நபரொருவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
அவர் கடந்த புதன்கிழமை (2) சேந்தான்குளம் பகுதியில் உள்ள தனது காணியை விற்று, அதனூடாக பெற்ற பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இருவர் அவரை வழிமறித்துள்ளனர்.
பின், அவரை தாக்கிவிட்டு பணம், கடவுச்சீட்டு, பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அதனையடுத்து, பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபடத் தொடங்கினர்.
காணி விற்பனைக்கான உறுதிப்பத்திரம் எழுதப்பட்டு சட்டத்தரணி முன்னிலையில் பணம் கைம்மாற்றப்பட்டபோது, காணி விற்பனை தரகரும் அவ்விடத்தில் இருந்துள்ளார். அத்தோடு, காணி விற்பனையாளர் பணத்துடன் வீடு திரும்பும்போதே பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் காணி விற்பனை தரகரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியபோது, ஊரெழு பகுதியில் உள்ள தரகரின் வீட்டிலிருந்து, கொள்ளையடிக்கப்பட்ட பணம், கையடக்கத் தொலைபேசி முதலானவற்றை பொலிஸார் கண்டெடுத்து கைப்பற்றியுள்ளனர்.
காணி விற்ற நபர் பணத்தோடு செல்வதாக தரகர் தனது மகனுக்கு தெரிவிக்க, தரகரின் மகன் தனது நண்பருடன் சென்று கொள்ளையடித்துள்ளதாக தரகர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, கைதானவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








