யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி பிரதான வீதியில் கந்தர்மடம் சந்தியில் நேற்று இரவு 10 மணியளவில் யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.நகர் பகுதியிலிருந்து திருநெல்வேலி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்.இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கந்தர்மடம் பகுதியில் இருந்து யாழ்.நகர பகுதிக்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்து காரணமாக சுமார் 30 நிமிடங்கள் அவ்வீதி ஊடான போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின.
விபத்தில் இரண்டு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(யாழ் நிருபர்- லோஜன் விஜய்குமார்)








