கடுவலை பிரதேசத்தில் பொலிஸ் உத்தரவை மீறி தப்பிச் செல்ல முயன்ற லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
நுரைச்சோலையில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை ஓட்டிச் சென்ற சாரதி, வத்தளையில் உள்ள தேநீர் கடைக்கு அருகில் லொறியை நிறுத்திவிட்டு தேநீர் அருந்துவதற்காக சென்றுள்ளார்.
இதன்போது சந்தேக நபரொருவர் குறித்த லொறியை திருடி அதனை ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் லொறியின் சாரதி இது தொடர்பில் பொலிஸாருக்க தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து லொறியை பின்தொடர்ந்து சென்றுள்ள நிலையில் லொறியை நிறுத்துமாறு சந்தேக நபருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
சந்தேக நபர் பொலிஸாரின் உத்தரவையும் மீறி ஏனைய வாகனங்கள் மீது மோதி தொடர்ந்து லொறியை ஓட்டிச் சென்றுள்ளார்.
பின்னர் பொலிஸ் அதிகாரிகள், தலாஹேன மற்றும் கடுவலை ஆகிய பகுதிகளில் வைத்து லொறி மீது பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள நிலையில் லொறியானது கடுவலை நீதிமன்றத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து லொறியை ஓட்டிச் சென்ற சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








