தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் காணப்படுவதனால் நாடு முழுவதும் மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மி.மீ வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நாட்டின் ஏனைய மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மி.மீ வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும் மற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை, அந்தமான் கடல் பிராந்தியத்தின் தென் பகுதியுடனும், வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்துடனும் இணைந்த கடல் பிராந்தியங்களுக்கு மேலாக நிலைகொண்டிருந்த தாழ் அமுக்க பிரதேசமானது மேற்கிலிருந்து வடமேற்குத் திசையை நோக்கி நகர்கின்றது.

இந்த தாழ் அமுக்கமானது மேலும் விருத்தியடைந்து சூறாவளியாக வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும்.

இதேவேளை இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் அபாயகரமானதாகவும் காணப்படும் என்பதனால் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரை குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here