புலோலி அறுபது பாகம் கிணற்றின் நிலை மற்றும் மக்கள் கோரிக்கைகள் தொடர்பான பார்வையிடலை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மேற்கொண்டார்.
பருத்தித்துறைப் பகுதியில் புலோலி கிராமத்தில் அமைந்துள்ள “அறுபது பாகம்” என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான கிணற்றின் தற்போதைய நிலைமை, அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் மக்கள் சார்ந்த அபிவிருத்திக் கோரிக்கைகளை பதிவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பார்வையிடல்.


புலோலி மக்கள் வாழும் தொன்மையான ஊராக விளங்குகிறது. இங்கு அமைந்துள்ள அறுபது பாகம் கிணறு, பல நூற்றாண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்ததுடன், இப்பகுதியின் பண்பாட்டு மரபையும் பல்லவிக் கால வரலாற்றையும் பறைசாற்றும் ஒரு முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.
இந்த கிணறு தற்போது தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படுவதாலும், பாழடைந்த நிலையில் உள்ளது. சுற்றுப்புறம் அடையாளம் தெரியாமல் சூழப்பட்டுள்ளது.

இந்நிலையில் புலோலி மக்கள், இக் கிணற்றைப் புதுப்பித்து, வரலாற்று அடையாளமாகவும் சுற்றுலா இழைமையாகவும் மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இது அவர்களது சமூகத்தின் அடையாளத்தைப் பேணுவதோடு, இளைய தலைமுறையினருக்கு அந்தந்த வரலாற்று முக்கியத்துவத்தை உணர்த்தும் வாய்ப்பையும் வழங்கும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி பதில் வழங்குகையில்,
இந்த விடயத்தில் மக்கள் நிலைத்த நம்பிக்கையுடன் வெளிப்படுத்திய கோரிக்கையை ஒட்டுமொத்தமாக உணர்கிறேன். இக்கிணற்றை முறையாக புனரமைத்து, சுற்றுப்புறத்தை அழகுபடுத்தி, வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும், ஏதேனும் சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்துடன் இணைத்து இந்தப் பகுதிக்கு நவீன சீரமைப்பை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், இவ்விடயம் தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்துடன் கலந்துரையாடல் நடத்தி, சட்டப்பூர்வமாக முறையான அனுமதிகளைப் பெற்று, புனரமைப்பு திட்டம் உருவாக்கப்படும்.
புலோலி அறுபது பாகம் கிணறு, ஒரு ஊரின் உணர்வுப் பிணைப்பு மட்டுமன்றி, வரலாற்றையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் சின்னமாக விளங்குகிறது. அதன் நிலைமையை மாற்ற மக்கள் முன்வைத்துள்ள இந்த முயற்சிக்கு முழுமையான ஆதரவு அளிக்கபட்டுள்ளதுடன், விரைவில் தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








