இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் “குரோதி” வருட மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகியுள்ளது.
இந்தநிலையில், குறித்த மகோற்சவ பெருவிழா கடந்த 8 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் வைரவர் உற்சவத்துடன் ஆரம்பமாகியது.
அதனையடுத்து கடந்த 9 ஆம் திகதி பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க கொடியேற்றம் இடம்பெற்றது.

இதனடிப்படையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் நான்காம் ஆம் திகதி வரை 27 நாட்கள் இந்த மகோற்சவ பெருவிழா நடைபெறவுள்ளது.
வருடாந்த மகோற்சவத்தின் 19 ஆவது திருவிழாவான இன்றைய தினம் சூர்யோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து, ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான், உள் வீதி உலா வந்து தொடர்ந்து வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
25 நாட்கள் நடைபெறும் உற்சவத்தின், கடைசி 15 நாள் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தற்போது புலம்பெயர் தேசங்களில் குடியேறியுள்ள தாயக உறவுகளும் இந்த உற்சவ காலத்தில் ஆலய தரிசனத்திற்காக வருகை தந்துள்ளனர்.
அதுமட்டுமன்றி அதிகளவான வெளிநாட்டவர்களும் இந்த உற்சவ காலத்தில் ஆலயத்திற்கு சமய கலாசார ஆடைகளுடன் பிரவேசித்திருப்பதையும் அவதானிக்க முடிந்துள்ளது.
மேலும் உற்சவ காலங்களில் விநியோகிக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களில் கடவுள் திருவுருவப்படங்கள் பிரசுரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.
ஆலயச் சூழலில் ட்ரோன் (Drone) கமராக்களைப் பயன்படுத்தி காணொளி பதிவு செய்வது தவிர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.








