தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் கொழும்பு குற்றப்பிரிவின் பொறுப்பில் உள்ள திமுது சதுரங்க என்ற ‘சமிட்புர சதூ’ என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியிடம் நடத்திய விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நேற்று (21) வெல்லம்பிட்டி, சேதவத்த பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமில்லாத வீடொன்றில் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் ரக துப்பாக்கியொன்றை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
28 வயதான இந்த சந்தேக நபர் இலங்கையிலிருந்து தப்பிச்சென்று ஓமானில் ஒளிந்திருந்தபோது கைது செய்யப்பட்டு கடந்த 18 ஆம் திகதி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
அதன்பின்னர் கொழும்பு குற்றப்பிரிவினர் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் அவரிடம் நீண்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்னரும் சந்தேகநபரிடம் நடத்திய விசாரணைகளில், வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் ஒன்றையும் 12 உயிருள்ள தோட்டாக்களையும் மட்டக்குளி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைத்திருந்த நிலையில் கொழும்பு குற்றப்பிரிவினர் அதனை மீட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








