விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று (30) காலை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட உள்ளது.

இந்த தேசியத் திட்டத்தின் தொடக்க நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் காலை 10.00 மணிக்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.

மதத் தலைவர்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர், பொதுப் பாதுகாப்புக் குழுக்கள், சுமார் 50 வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்கவுள்ளனர்.

இளம் தலைமுறையையும் பாடசாலை மாணவர்களையும் பாதிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.

அரசாங்கத்துடன் இணைந்து, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட பல துறைகள் இன்று முதல் இந்தத் திட்டத்தில் இணைக்கப்படுகின்றன.

மேலும், அனைத்து மாகாண, மாவட்ட, பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகள் உறுதிமொழி எடுப்பதும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

கிராமிய அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்ததாவது,
“விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான இந்த தேசிய நடவடிக்கையில், அனைவரின் பங்களிப்பும் அவசியம். இதற்காக, தேசிய செயற்குழுவும், மாவட்ட மற்றும் பிரதேச மட்ட செயற்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்படும் இத்திட்டம், நாட்டின் போதைப்பொருள் விநியோகத்தையும் தேவையையும் குறைப்பதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here