
ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 64 வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 235 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, மிட்ச்சல் மார்ஸ் வெறுமனே 64 பந்து வீச்சுகளுக்கு முகம்கொடுத்து 8 ஆறு ஒட்டங்கள் 10 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 117 ஓட்டங்களை பெற்று அபாரம் காட்டியிருந்தார்.
மேலும் நிக்கொலஸ் பூரான் 27 பந்துகளூக்கு முகம் கொடுத்து 5 ஆறு ஓட்டங்கள் 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக மொத்தம் 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அதேபோல அணி சார்பில் மார்க்ரம் 36 ஓட்டங்களையும் அணித்தலைவர் ரிசப் பன்ட் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சில், சாய் கிசோர் 3 ஓவர்கள் மாத்திரம் பந்து வீசி 34 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினை கைப்பற்றியுருந்தார். அத்துடன் அர்ஷாத் கான் 3 ஓவர்கள் பந்து வீசி 1 விக்கட்டினை கைப்பற்றியிருந்தார்.
இதனை தொடர்ந்து 235 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போராடி தோல்வியடைந்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் சாருக் கான் 29 பந்துவீச்சுகளுக்கு முகம் கொடுத்து 3 ஆறு ஒட்டங்கள் 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 57 ஓட்டங்களை பெற்றுகொடுத்தார்.
மேலும் சுப்மன் ஹில் ,ஷெர்ஃப்ன் ருதஃபோட், ஜோஸ் பட்லர் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் முறையே 38, 35, 33, 21 ஓட்டங்களை பெற்றுகொடுத்தனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சில் வில்லியம் ஒரோக் 4 ஓவர்கள் பந்துவீசி 27 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
மேலும் அவேஷ் கான் 3.5 ஓவர்கள் பந்துவீசி 51 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுக்களையும் ஆயூஷ் படோனி 1 ஓவர் மாத்திரம் பந்துவீசி 4 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
அத்துடன் ஆகாஷ் மகாராஜ் சிங் மற்றும் சஹபாஸ் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கட்டினையும் கைப்பற்றியுள்ளனர்.
நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சார்பில் அதிரடி காட்டியிருந்த மிட்சல் மார்ஸ் பிளேயர் ஒவ் மட்ச் ஆக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.






