மன்னார் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுரம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு இன்றையதினம் சனிக்கிழமை காலை (30.11.2024) சுஷி பண பரிமாற்ற நிறுவனத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக சாந்திபுரம் கிராமம் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட நிலையில் மன்னார் பிரதேச செயலகத்துடன் இணைந்து சுஷி பண பரிமாற்று நிறுவனம் முதல் கட்டமாக உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்துள்ளது.

குறிப்பாக வெள்ளத்தின் போது முகாம்களுக்கு செல்ல முடியாத நிலையில் வீடுகளில் இன்னல்களுக்கு மத்தியில் வசித்த குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு அரிசி, சீனி, பருப்பு, சோயா உள்ளடங்களாக அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
சாந்திபுரம் கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகஸ்தர், சமூர்த்தி உத்தியோகஸ்தர், சாந்திபுரம் விளையாட்டுகழக உறுப்பினர்கள், சுஷி நிறுவனத்தின் பங்குதாரர்கள் இணைந்து குறித்த உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தனர்.

- மன்னார் நிருபர் – எஸ்.ஆர்.லெம்பேட்








