தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர தோட்டத்தில் மரத்திலிருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே தோட்டத்தைச் சேர்ந்த 31 வயதுடையவரும், ஒரு பிள்ளையின் தந்தையுமான ந .கனகேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் மற்றொரு நபருடன் 100 அடி உயரமுள்ள மரத்தில் ஏறி, மரத்தின் கிளைகளை விறகுக்காக வெட்டிக் கொண்டிருந்த வேளையில், குளவி கொட்டுக்கு இலக்காகி மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
மேலும் அவர் குளவிகள் கொட்டியதால் பயத்தினால் மரத்தில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலவாக்கலை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான மற்றைய நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








