அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 19ஆவது ஐ.பி.எல் தொடர் வீரர்களுக்கான மினி ஏலம் டிசம்பர் 16 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) அறிவித்துள்ளது.
இது தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெளிநாட்டில் நடக்கும் ஏலமாகும். கடந்த 2023ல் துபாயில், 2024ல் ஜெத்தாவில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது.
தற்போது, சில முக்கிய வர்த்தகங்கள் மற்றும் ஊகங்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் அணியில் உள்ள ஷெபான் ரூதர்போர்ட்டை ரூ. 2.6 கோடிக்கு மும்பை அணி வாங்கியுள்ளதாகவும், லக்னூர் வீரர் ஷர்துல் தாக்கூர் ரூ. 2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான உயர்மட்ட வர்த்தக ஊகங்கள் கிளம்பியுள்ளன.
இதில், சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் விக்கெட் காப்பாளர்-துடுப்பாட்ட வீரர் சஞ்சு சாம்சன் இடமாற்றம் குறித்து செய்திகள் பரவும் நிலையில், ரோயல்ஸ் அணியும் சஞ்சு சாம்சனை விடுவிக்க கூடுதல் வீரர் ஒருவரை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு வீரர்களின் மதிப்பு இந்திய மதிப்பில் ₹18 கோடி பிரிவில் இருப்பதால், நேரடியாக மாற்றம் செய்வதே CSK இன் முன்னிலை விருப்பமாகும். ஆனால் ஐந்து முறை சாம்பியன் அணி CSK மற்றொரு வீரரையும் வர்த்தகத்தில் இணைக்கும் வாய்ப்பை மறுத்ததில்லை.
அதே நேரத்தில், சகலதுறை வீரர் சாம் கரன் வர்த்தகத்திற்கு செல்லலாம் எனவும், ஜடேஜாவுக்கு ரோயல்ஸ் அணியில் தலைமை பதவி வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.








