2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி, அவற்றைச் செலவிட்ட விதம் மற்றும் முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த விவாதத்தில் அமைச்சுக்களின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் மற்றும் 2025 டிசம்பர் 31 ஆம் திகதி வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடல், சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் இடம்பெற்றது.
குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் இந்தக் கூட்டம் அக்டோபர் 21 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், கீழ்க்கண்ட அமைச்சுகளின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு,வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, சுற்றாடல் அமைச்சுகளில் ஆகும்.
கூட்டத்தில் உரையாற்றிய குழுத் தலைவர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளதாவது,
“2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகளை அமைச்சுகள் எவ்வாறு செலவழிக்கின்றன, அவற்றின் முன்னேற்றம் எவ்வாறு உள்ளது என்பதை குழு ஆராயும். இதற்கான முழுமையான அறிக்கை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.”
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, தனது குழுவின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுகளின் பணிநிலை, நிதி ஒதுக்கீடு மற்றும் முன்னேற்றம் தொடர்பான விவரங்களும் இவ்வாறு மதிப்பாய்வு செய்யப்படும்.
அத்துடன், அத்தியாவசியத் திட்டங்களின் முன்னேற்றம் பற்றிய அறிக்கைகளை குழுவிற்கு வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறீநேசன், ரொஷான் அக்மீமன, சதுரி கங்காணி, சுசந்த குமார நவரத்ன, கிட்ணன் செல்வராஜ், (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத், சுதத் பலகல்ல, சித்ரால் பெர்னாண்டோ, ஜே.சி. அளவதுவல, சுஜீவ சேனசிங்க, உபுல் கித்சிறி மற்றும் எம்.எஸ். உதுமாலெப்பெ ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கலந்துரையாடல், வரவுசெலவுத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தலில் வெளிப்படைத்தன்மையையும், அமைச்சுகளின் பொறுப்புணர்வையும் வலுப்படுத்தும் நோக்குடன் நடைபெற்றது.








