போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பது என்பது அரசியல் அல்லது பொருளாதார விவாதத்திற்குரிய விஷயம் அல்ல, இது ஒரு தேசிய பொறுப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
‘முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ என்ற தலைப்பில், போதைப்பொருள் அச்சுறுத்தலை வேரோடு ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டம் தொடர்பாக ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று(23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் வர்த்தகம் இளைஞர் சமூகத்தையும், பாடசாலை மாணவர்களையும் பாதித்து வருவதாகவும், இதனுடன் தொடர்புடைய பல குற்றச்செயல்கள் நாட்டின் சட்டம், பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பையே அச்சுறுத்துவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
அவர் மேலும், “இனிமேலும் இந்த அச்சுறுத்தலுக்கு இடமளிக்காது என்பதே அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு. இதற்காக அரசியல் தலைமைத்துவம் மட்டுமின்றி, பொதுமக்கள் பங்கேற்பும் அவசியம்,” எனவும் தெரிவித்தார்.
இந்த நோக்கத்திற்காக நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பரந்தளவிலான பிரச்சாரத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி மேலும், “கடந்த காலங்களில் அரசியல் நிழலின் கீழ் சுதந்திரமாக வளர்ந்த குற்றச்செயல்கள் இப்போது நாட்டை கடுமையாகப் பாதித்துள்ளன. இதனை முற்றிலும் ஒழிக்க காவல் துறை, சுங்கத்துறை, போக்குவரத்து திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் உள்ளிட்ட முக்கிய அரச அமைப்புகள் இணைந்து செயற்படுகின்றன,” என்றார்.
எதிர்கால சந்ததியினருக்காக இந்த தேசிய பேரழிவை முற்றிலும் தோற்கடிக்க வேண்டியது அனைவரின் மறுக்க முடியாத பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
‘முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாட்டின்’ ஆரம்ப நிகழ்வு வருகிற அக்டோபர் 30 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.
இந்த நிகழ்வில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, மற்றும் அரச–தனியார் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பொழுதுபோக்கு துறை பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






