ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும் என ஹிரு மீடியா நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி ஹிரு மீடியா நெட்வொர்க்,2025 ஆம் வருட சொத்து அறிக்கையின் அடிப்படையில், அமைச்சர் கே.டி. லால்காந்தவிடம் ரூ. 460 மில்லியன் ரூபாய் சொத்துக்கள் உள்ளன என்றும் அவருடைய “பத்திரங்கள்” மாத்திரம் 383.9 மில்லியன் ரூபாய் என்றும் தெரிவித்ததோடு அவரது மகளின் பெயரில் உள்ள சொத்து மற்றும் நிறுவனப் பங்குகளையும் குறிப்பிட்டிருந்தது.
எனினும் அதன் பின்னர் ஒரு கணக்குப் பிழையின் காரணமாக அது வெளியானது எனவும் உண்மையான தொகை சுமார் 80 மில்லியன் ரூபாய் என்றும் ஹிரு செய்தி நிறுவனம் ஏற்றுக்கொண்டது.
அமைச்சரின் பத்திரங்கள், சுமார் ரூபாய் 143,475 என்றும் 383.9 மில்லியன் அல்ல என்றும் மொத்த சொத்துக்கள் 460 மில்லியனுக்கும் மேல் அல்ல, சுமார் 80 மில்லியன் ரூபா மாத்திரமே எனவும் அவர்களின் முதல் அறிக்கை முற்றிலும் தவறானது என்றும் நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில் ஏப்ரல் 18 ஆம் திகதி அமைச்சர் லால்காந்த, ஹிரு செய்திகளின் உரிமையாளரான ஏசியா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனுக்கு சட்ட அறிவித்தல் அனுப்பியுள்ளார்.
ஹிருவின் செய்தி அறிக்கை பொய்யானது மற்றும் அவதூறானது என்றும் அவர்கள் வேண்டுமென்றே தனது சொத்துக்களை மிகைப்படுத்தி காட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அமைச்சரின் சட்ட நடவடிக்கைக்கு ‘ஹிரு சட்டப்பூர்வமாகப் பதிலளிக்கும் எனவும் மேலும் தமது நிறுவனம் காவல்துறையிடம் பாதுகாப்பு கோரியதாக இணையத்தில் பரப்பப்படும் போலிக் கடிதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்’ எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.








