பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கை, அடுத்த ஆண்டு 2019 இல் இருந்த நிலைக்கு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் வகையில் நியூயோர்க் நகரில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்த போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த கருத்துகளை தெரிவித்தார்.
மேலும் “ஒரு பொருளாதாரம் முற்றாகச் சரிந்தால், பழைய நிலைக்கு திரும்ப 10 ஆண்டுகள் பிடிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், 2022 இல் வங்குரோத்து நிலையை எதிர்கொண்ட இலங்கை, 2026 இல் 2019 இல் இருந்த நிலையை மீண்டும் அடையக்கூடிய நிலையிலுள்ளது” எனத் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அதிகாரபூர்வமாக 2022 ஏப்ரல் 12ஆம் திகதி இலங்கை வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய பங்களிப்பு வெற்றிக்கு வழிவகுத்ததாக குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.
“2019 ஆம் ஆண்டில் சுமார் 3% வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி நாங்கள், 2024 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில், வரலாற்றில் இல்லாத வகையில் பாராளுமன்ற ஆசனங்களை வென்றது,” என்றும் ஜனாதிபதி கூறினார்.
இப்போது சர்வதேச நிதி நிறுவனங்களும், மதிப்பீட்டு நிறுவனங்களும் இலங்கையின் விரைவான மீட்சியை பாராட்டியுள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவது மட்டுமன்றி, எதிர்கால நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் நிலைத்த வளர்ச்சியை உருவாக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.








