அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22 ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான எழுத்து மூல வாதங்கள் இன்று (3) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட நீதியரசர் குழு, சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் எழுத்து மூல வாதங்களை இன்று பி.ப 3:00 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியுமென உத்தரவிட்டுள்ளது.
22 ஆவது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நேற்று (2) நிறைவு செய்தது.
கடந்த செப்டம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமான இந்த விசாரணையில், முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த விவகாரத்தை முழுமையான நீதியரசர் குழு பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் – BASL, ஐக்கிய மக்கள் சக்தி – SJB மற்றும் சர்வஜன பலய உள்ளிட்ட பல்வேறு தனிநபர்கள் மற்றும் அமைப்புகளால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
முன்மொழியப்பட்ட திருத்தத்தின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை குறித்து மனுதாரர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சில விதிகளுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஒப்புதலுடன், பொது வாக்கெடுப்பு அனுமதியும் தேவை என குறித்த தரப்பினர் வாதிட்டுள்ளனர்.
முன்மொழியப்பட்ட 22 ஆவது திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்:
1. உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயதை 65 இலிருந்து 67 ஆக அதிகரித்தல்
2. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயதை 63 இலிருந்து 65 ஆக அதிகரித்தல் ஆகியனவாகும்.
இந்நிலையில் விசாரணையின் முடிவில், 5 பேர் கொண்ட நீதியரசர் குழு மனுதாரர்களை இன்றைய தினம் எழுத்து மூல வாதங்களை சமர்ப்பிக்குமாறு பணித்தது.
22 ஆவது திருத்த சட்டமூலத்தின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இரகசிய தீர்மானம் அரசியலமைப்பு நடைமுறைக்கு அமைய பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








