விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளரும், பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 12 ஆம் திகதியன்று அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, குறித்த கைதிகள் விசேட பொது மன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளனர்.

அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனையை அனுபவிக்கும் கைதிகளும், சிறு குற்றங்களுக்காகச் சிறைத் தண்டனையில் பாதி அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தை அனுபவித்த 65 வயதுக்கும் மேற்பட்ட கைதிகளுமே இவ்வாறு எஞ்சிய தண்டனைக் காலம் ரத்துச் செய்யப்பட்டு விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட பொது மன்னிப்பின் கீழ் 4 பெண் கைதிகளும், 384 ஆண் கைதிகளும் விடுதலை பெறவுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஆணையாளரும், பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விசாக பூரணை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கைதிகளைத் திறந்தவெளியில் பார்வையிட விசேட வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

அதன்படி, குறித்த தினங்களில் கைதிகளின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவு, இனிப்பு மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய தலா ஒரு பொதியை மாத்திரமே வழங்க முடியும் எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here