மஹியங்கனை – கணுவ பகுதியில் உள்ள வியானா கால்வாயில் தவறி விழுந்த காதலனை காப்பாற்ற முயன்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போன சோக நிகழ்வு நேற்று (ஜூலை 20) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 வயதுடைய மாணவியே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
கால்வாயில் நீரோட்டம் அதிகமாக காணப்பட்ட நிலையில் மாணவி மற்றும் அவரது காதலன் கால்வாய் அருகே நடந்துச் சென்றுள்ளனர்.
அப்போது, திடீரென இளைஞர் கால்வாயில் தவறி விழுந்ததாகவும், அவரைக் காப்பாற்ற முயன்ற மாணவியும் பின்னர் நீரில் விழுந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி வழியாக சென்ற தம்பதியினர் விரைந்து குதித்து இளைஞனை காப்பாற்றியுள்ளனர். இருந்தும் மாணவியை மீட்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர், மாணவியை அவரது வீட்டில் இறக்கிவிடுவதற்காக அழைத்துச் சென்ற வேளையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தைக் ஏற்படுத்தியுள்ளது.








