மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் பட்டுள்ள நிலையில் முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல்   இன்று வியாழக்கிழமை(24) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார்  மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் ஆவணி மாதம் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 ஆம் திகதி விசேட திருவிழாவாக இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவுக்கான ஆயத்த கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை  கிறிஸ்து நேசன் அடிகளார் மற்றும் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் குறித்த கலந்துரையாடல் இடம்  பெற்றது.

வருடா வருடம் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழமை.

இந்த நிலையில் வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய சகல விதமான ஏற்பாடுகள் குறித்தும் அழைக்கப்பட்ட திணைக் களங்களுடன் கலந்துரையாடப்பட்டது.

வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரம்,போக்குவரத்து,மருத்துவ வசதிகள் ,நீர் விநியோகம் ,உணவு விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டது.

மேலும் சட்டம் ஒழுங்கை பின்பற்றும் வகையில் முப்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.

மன்னார் மாவட்ட செயலாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த முன்னாயத்த கலந்துரையாடலில்,  உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், ராணுவம், காவல்துறையினர், கடற்படை அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.

(மன்னார் நிருபர்; லம்பேர்ட்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here