நெடுந்தூரப் பயணங்களுக்காக பேருந்து இருக்கைகளை இணையவழி ஊடாக முன்பதிவு செய்யும் ஒரு முன்னோட்டத் திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று அறிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாட்டில் அன்றாடப் போக்குவரத்திற்கு பேருந்துகளே மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன

எனினும், பயணிகள் இருக்கைகளை முன்பதிவு செய்ய பேருந்து நிலையங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருப்பதால், பயணத் திட்டமிடல் கடினமாகி, பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

“நாம் முன்னெடுத்துள்ள இந்த திட்டம், பயணிகள் முன்கூட்டியே இருக்கைகளை முன்பதிவு செய்யவும், தங்கள் பயணங்களை மிகவும் இலகுவாக திட்டமிடவும் உதவும். அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவதே எமது இந்த திட்டத்தின் நோக்கம்,” ஆகும் என அவர் கூறினார்.

ஆரம்பத்தில் தனியார் பேருந்து நடத்துநர்கள் மூலம் செயல்படுத்தப்படும், இந்தச் சேவையை எதிர்காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் (SLTB) விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

புத்தாண்டு விடுமுறைக் காலத்திற்கு முன்னதாக, பல தனியார் பேருந்து சேவை வழங்குனர்களுடன் இணைந்து இந்தத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவன தலைவர் மொதிலால் டி சில்வா தெரிவித்தார்.

இந்த முன்னோட்ட திட்டத்தின் கீழ், காலி, கண்டி, மாக்கும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையம் உள்ளிட்ட முக்கியப் போக்குவரத்து மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த முயற்சியின் வெற்றியைப் பொறுத்து, நாடு முழுவதும் இதை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகள் www.busticket.gov.lk என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 0112001266 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ இருக்கைகளை முன்பதிவு செய்யலாம். மாக்கும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்தில் நேரடி உதவியும் கிடைக்கிறது.

இந்தச் சேவைக்குக் மேலதிகமாக சுமார் ரூ. 30 கட்டணம் வசூலிக்கப்படுவதோடு அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது.

விளம்பரங்கள் மூலம் இந்தத் திட்டத்தை செயற்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் என்றும், பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தித் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு ஊக்குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here