சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, நேற்று (02) ஜெனரல் சர் ஜான் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (UH-KDU) சிறப்பு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
இவ்வாய்வின் போது, மருத்துவமனையின் தற்போதைய சுகாதார சேவைகள், மனித மற்றும் பௌதீக வளங்கள், எதிர்கால தொலைநோக்கு திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், பல் மருத்துவம், புற்றுநோயியல், அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை, டயாலிசிஸ், கீமோதெரபி உள்ளிட்ட பிரிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
மருத்துவமனை நிர்வாகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், கேத் லேப் வசதிகளை விரிவுபடுத்தல், கதிரியக்க நிபுணர் நியமனம், மருந்தக வசதி, சுகாதார ஊழியர் காலியிடங்கள், பொது-தனியார் கூட்டாண்மை போன்ற பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
மருத்துவமனை தற்போது 889 படுக்கைகள் கொண்டதுடன், சர்வதேச தரத்திற்கு ஏற்ப உயர்தர சிகிச்சை, கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.







