அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், அண்மையில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், மாவட்டத்தின் அனைத்து சுகாதார நிறுவனங்களின் தலைவர்கள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கலந்துரையாடலில், கிழக்கு மாகாணத்தின் சுகாதார அபிவிருத்தி திட்டங்கள், சுகாதார சேவையின் தற்போதைய நிலை, எதிர்கால சவால்கள், தேவையான மனிதவளமும், பௌதீகவளமும் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் சுமார் 800,000 மக்களுக்கு சேவையளிக்கும் ஒரு பொது மருத்துவமனை, இரண்டு அடிப்படை மருத்துவமனைகள், ஏழு பிராந்திய மருத்துவமனைகள், 18 ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையங்கள் மற்றும் ஏழு சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் உள்ளன.
கலந்துரையாடலின்போது, மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய ரூ. 45 பில்லியன் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தற்போது நிலவி வரும் சுகாதார பணிக்கான மனிதவள பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், புதிய திட்டத்தின் கீழ் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் 1900 சுகாதார உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
அத்துடன், சுகாதாரத் துறையில் களப்பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் திட்டம் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அரச சேவைக்காக மொத்தமாக 70,000 புதிய நியமனங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அதில் கணிசமான பகுதி சுகாதாரத் துறைக்கே ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சுகாதார சேவைகளின் மேம்பாடு என்பது வெறும் நிறுவன மட்டத்தில் அல்லாமல், மாகாணம், மாவட்டம் மற்றும் மக்களின் நலனுக்காக யோசித்து முன்னெடுக்க வேண்டிய பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும், அந்த நோக்கத்தில் தங்கள் திட்டங்களை முன்னெடுக்குமாறு சுகாதார நிறுவனங்களின் தலைவர்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
குறைந்த மனிதவளத்துடன் சவால்களை சமாளித்து மக்களுக்கு தொடர்ந்து சுகாதார சேவைகளை வழங்கி வரும் ஊழியர்களின் சேவையை பாராட்டிய அமைச்சர், அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார். நிகழ்வில், கிராமப்புற வளர்ச்சி மற்றும் சமூக பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரதி அமைச்சர் எல்.ஜி. வசந்த பியதிஸ்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ. ஆதம்பாவா, அப்துல் வசீன், சுகாதார நிர்வாகிகள், நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.








