78வது உலக சுகாதார அமைப்பின் (WHO) தெற்காசிய பிராந்தியக் குழுக் கூட்டம் அடுத்த வாரம் இலங்கையில் தொடங்கவுள்ளது.

கொழும்பில் அக்டோபர் 13 முதல் 15 வரை நடைபெறும் இந்த கூட்டத்தில், வலுப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமை மற்றும் புகையில்லா புகையிலைப் பொருட்களை எதிர்த்துப் போராடுவது உள்ளிட்ட முக்கிய சுகாதார விடயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார அவசர நிதி (SEARHEF) விரிவாக்கம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பான் எதிர்திறனுக்கு (AMR) எதிரான நடவடிக்கைகள் குறித்தும் சுகாதார அமைச்சர்கள் மற்றும் உறுப்பு நாடுகளின் மூத்த அதிகாரிகள் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், டாக்டர் கேத்தரினா போஹ்மே உள்ளிட்ட பல்வேறு உலக சுகாதார நிபுணர்கள் இந்த மூன்று நாள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்த அமர்வின் மூலம் எதிர்வரும் ஆண்டுகளுக்கான பிராந்திய சுகாதார நிகழ்ச்சி நிரல் வகுக்கப்படும் எனவும், முந்தைய ஆண்டுகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுடன் ஒப்பிட்டு முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தின் போது, உறுப்பு நாடுகளும் உலக சுகாதார அமைப்பும் ஆரோக்கியமான முதுமையை முன்னெடுக்கும் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோரின் விகிதம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், 2050ஆம் ஆண்டில் அவர்கள் பிராந்திய மக்கள்தொகையில் 20.9% ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், புகையில்லா புகையிலை, மின்னணு சிகரெட்டுகள், நிக்கோடின் பைகள் மற்றும் பாக்கு போன்றவற்றின் பயன்பாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளும் இதில் விவாதிக்கப்படவுள்ளன.

2008ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார அவசர நிதி இதுவரை 10 உறுப்பு நாடுகளில் 49 அவசரநிலைகளில் உதவியுள்ள நிலையில், அந்த நிதியின் வரம்பை விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் மக்கள் வசிக்கும் தெற்காசிய பிராந்தியத்தின் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தி, மனநலம், நல்வாழ்வு, பெண்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கான முதலீடுகள், தொழில்நுட்ப புதுமைகள் மற்றும் சுகாதார ஆராய்ச்சிகளை மேம்படுத்துவது ஆகியவற்றில் கூட்டம் கவனம் செலுத்தும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here