யாழ்ப்பாணம் – எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொண்டு வடமாகாண சபையை மீண்டும் கைப்பற்றுவது குறித்து தமிழ் கட்சிகள் இடையே நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் மாலை 3.00 மணியளவில் ஆரம்பமான இக்கூட்டம், வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தலைமையில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் உள்ளிட்ட தமிழ் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அரசாங்கம் அடுத்த ஆண்டு வடமாகாண சபைத் தேர்தலை நடத்தக்கூடும் என அறிவித்துள்ள நிலையில், கட்சிகள் ஒற்றுமையாகப் போட்டியிடுவது, வெற்றி பெறுவதற்கான வியூகம் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு போன்ற விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உட்பட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழரசுக் கட்சி சார்பில் அழைக்கப்பட்ட எம்.ஏ. சுமந்திரன் சுகவீனம் காரணமாகக் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
தேர்தலை எதிர்கொள்வதற்கான தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு முயற்சிக்கு இக்கலந்துரையாடல் முக்கியமான ஆரம்பகட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.








