பாராளுமன்றம் வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானம், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
அமர்வுகள் நடைபெறும் ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை பாராளுமன்ற அலுவல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. தொடர்ந்து 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகள், மேலும் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 21 – தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழான 2446/34 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி மீதான விவாதம் இடம்பெறும். பின்னர் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புத் (திருத்தச்) சட்டமூலம் மூன்றாவது வாசிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படும்.
ஒக்டோபர் 22 – விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டம் மற்றும் மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான விதிகள் விவாதிக்கப்படவுள்ளன.
ஒக்டோபர் 23 – போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பை வலுப்படுத்தல் தொடர்பான அரசாங்கத்தின் சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்.
ஒக்டோபர் 24 – மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் லொஹான் ரத்வத்தே, ஹீன்மஹத்மயா லியனகே, டிக்ஸன் ஜே. பெரேரா, மேர்வின் டி. த சில்வா, வை.ஜீ. பத்மசிரி, ஆர்.எம்.ஆர் சூல பண்டார, மாணிக்கவாசகர் கனகசபாபதி ஈழவேந்தன் ஆகியோருக்கான அனுதாபப் பிரேரணைகள் வாசிக்கப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியின் ஒத்திவைப்பு பிரேரணைகளும் ஒவ்வொரு நாளின் இறுதியில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.








