விஜய் மல்லையா உருவாக்கிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி, இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்தது.
2008 ஆம் ஆண்டில் ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான இந்த அணி, கடந்த 17 ஆண்டுகளில் பல சாதனைகளை பதிவு செய்தது, தற்போதைய சீசனில் கிண்ணத்தை கைப்பற்றியும் அசத்தியது. ஆனால் அந்த வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சன நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த பின்னணியில், அணியை விற்பனை செய்ய அணியின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணியின் மதிப்பு சுமார் 2 பில்லியன் டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் விற்பனை முடிவுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விற்பனையில் “சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா”, “அதானி” குழுமம் போன்ற நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. அதோடு, கே.ஜி.எஃப் பாகம் 1 & 2, சலார், காந்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்த ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் கூட ஆர்சிபி அணியை வாங்கி இணை உரிமையாளராக மாற முயற்சி செய்து வருகிறது.








