புத்தரின் பாரம்பரியத்துக்குச் சொந்தமான இலங்கை நிலத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
சமீபத்திய திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்குவதாக குறிப்பிட்டார்.
“திருகோணமலையில் ஏற்பட்ட பதற்றத்தினால் புத்தர் சிலை அகற்றப்பட்ட பின்னர், மீண்டும் சம்பிரதாயத்திற்கிணங்க அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் போது தேரர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும், பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். சமூக ஊடகங்களில் தேரர்களை தாக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
பௌத்த வணக்கஸ்தலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற யாருக்கும் உரிமை இல்லை. பொலிஸார் எடுத்த நடவடிக்கைகளுக்கும், அவர்களை அனுப்பிய அரசாங்கத்திற்கும் பொறுப்பு உண்டு. அரசாங்கமே மக்களை தூண்டிவருகிறது.
அரசாங்கத்தின் அதிகாரம் ஐந்து வருடங்களுக்கே. ஆனால் பௌத்த மதத்தின் உரிமை இலங்கையில் 2,000 ஆண்டுகளாக நிலைத்து உள்ளது. புதுடெல்லியில் சமீபத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள் இலங்கையில் இடம்பெறாது என யார் உறுதி தர முடியும்?” என அவர் கேள்வி எழுப்பினார்.








