நாடு எதிர்கொள்ளும் வலு சக்தி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, புத்தாண்டில் அதிக வலுசக்தி திறன் கொண்ட மின் சாதனங்களை கொள்வனவு செய்யுமாறு இலங்கையின் நிலைபெறுதகு வலு அதிகார சபை மக்களை வலியுறுத்தியுள்ளது.
புத்தாண்டுக்காக மக்கள் புதிய சாதனங்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்வது ஒரு இயல்பான வழக்கம் என்றும்,அதிக ஆற்றல் திறன் கொண்ட மின்விளக்குகள், குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் மற்றும் மின்விசிறிகள் போன்ற மின் சாதனங்களை கொள்வனவு செய்வது சிறந்தது என்றும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் தலைவர் விஜேந்திர பண்டார குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட சாதனங்கள் மற்றும் உபகரணங்களின் ஆற்றல் செயல்திறனைக் காட்டும் வகையில், 1 முதல் 5 வரையிலான நட்சத்திரங்களைக் கொண்ட ஆற்றல் திறன் மதிப்பீட்டு முத்திரையை அதிகார சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
4 அல்லது 5 நட்சத்திரங்களைக் கொண்ட மின் சாதனங்கள் அதிக ஆற்றல் திறன் கொண்டவை என்றும், விலை அதிகமாக காணப்படுகின்ற போதும் அத்தகைய சாதனங்களை வாங்குவதை ஒரு பழக்கமாகக் கொள்ளுமாறும் மக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், இனிப்பு வகைகள் தயாரித்தல் மற்றும் பிற செயல்பாடுகளைப் பகல் நேரத்தில் மேற்கொள்ளுமாறும் அவர் மக்களை கேட்டு கொண்டுள்ளார்.
புத்தாண்டு விழா நடவடிக்கைகளை மாலை 6 மணி வரை மட்டுப்படுத்துவது சிறந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.








