அமெரிக்க மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவடையும் நிலையில் “ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள் அல்லது குண்டுவீச்சுக்கு ஆளாவீர்கள்” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இதேவேளை எம்மை அச்சுறுத்த வேண்டாம் எனவும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் நாமும் போரிடத் தயாராக இருக்கிறோம் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று இந்த வாரம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்தது.

எனினும் தற்பொழுது அது நிச்சயமற்றதாகி உள்ளது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா, ஹார்முஸ் நீரிணைக்கு அருகே ஈரான் கொடி ஏற்றப்பட்ட கப்பல் ஒன்றைக் கைப்பற்றியது. இது ஈரானின் கோபத்தை அதிகப்படுத்தியதுடன் எண்ணெய் விலைகளும் மீண்டும் அதிகரித்தன.

இந்த நிலையில் ஒப்பந்தம் இன்றி போர்நிறுத்தம் காலாவதியாகுமானால், அதிக குண்டுகள் வெடிக்கத் தொடங்கும் என்றும் முன்னெப்போதும் கண்டிராத சவால்களை ஈரான் சந்திக்கும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இதேநேரம் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், மிரட்டல்களின் கீழ் பேச்சுவார்த்தைகளை ஏற்க முடியாது என்றும் தமது நாடு போர்க்களத்திற்குத் தயாராக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் “போர்க்களத்தில் புதிய ஆயுதங்களை” பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீண்டதூர ஏவுகணைகளை நிறுத்துதல், ஹோர்முஸ் நீரிணையை திறத்தல் போன்ற அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்துள்ளமை ஈரான் மீதான அமெரிக்கத் தடைகள்,போர் இழப்பீடு,சேதங்களுக்கான பணம் போன்ற ஈரானின் கோரிக்கைகளுக்கு அமெரிக்கா செவி கொடுக்காமை போன்ற காரணங்களால் இரு நாடுகளும் போர் நிறுத்த  ஒப்பந்தத்தை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here