மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறும்,மக்கள் தமது ஆணையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
கொழும்பு, மாளிகாவத்தையில் உள்ள பி.டி. சிறிசேன மைதானத்தில் நடைபெற்ற கட்சியின் மே தினப் பேரணியில் உரையாற்றிய அவர், ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்துவிட்டதாகவும்,இரு அணிகளும் கூட்டாக இணைந்து முன்னேறத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை எளிதாக்குவதற்காக ஒரு குழுவை நியமிக்க ஆலோசனைகள் இருந்தபோதிலும், கூட்டணி திறம்பட வடிவம் பெற்றுவிட்டதால் அத்தகைய நடவடிக்கை இனி அவசியமில்லை என்று பிரேமதாச குறிப்பிட்டார்.
கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையைச் சீர்குலைக்க சில தனிநபர்கள் முயற்சிப்பதாகவும் ஆனால் அத்தகைய முயற்சிகள் வெற்றிபெற அனுமதிக்கப்படாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் பொருளாதார முகாமைத்துவம், நிர்வாகம் மற்றும் கூறப்படும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தனது உரையின் போது அரசாங்கத்தை விமர்சித்தார். மேலும், பொது நிறுவனங்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் நலிவடைந்த சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவசரத் தீர்வுகள் தேவை என்றும், தனது கட்சி ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைக்கத் தயாராக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
நாட்டை சீரமைக்கவும், மேலும் திறமையான ஒரு ஆட்சி முறையை வழங்கவும் எதிர்க்கட்சி மற்ற முற்போக்கு சக்திகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் பிரேமதாச கூறினார்.
மாகாண சபை தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்த அவர், அரசாங்கம் ஜனநாயக செயல்முறையைத் தாமதப்படுத்தக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.







