இலங்கைக்கு வடகிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்ருப்பதன் காரணமாக, இலங்கை முழுவதும் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த இரண்டு நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13) மாலை 4.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டல நிலை அடுத்த 48 மணி நேரத்திற்குள் படிப்படியாக நாட்டை விட்டு விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதன் தாக்கத்தினால் பல மாகாணங்களில் மழைப்பொழிவு தொடர்ந்தும் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழை,பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here