நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவதைத் தடுக்கும் வகையில் போர் அதிகாரத் தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்லும் பிரேரணையில், அமெரிக்க செனட் சபை நேற்று 50-47 என்ற வித்தியாசத்தில் இன்று (20) வாக்களித்ததுள்ளது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 50 பேர் வாக்களித்ததோடு எதிராக (ட்ரம்புக்கு ஆதரவாக 47) 47 பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த நடைமுறை வாக்கெடுப்பு, ஜனாதிபதிக்கு அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே(குடியரசு கட்சி) இருந்து கிடைத்த ஒரு அரிதான கண்டனத்தைக் குறிக்கிறது. ஈரானுடனான தற்போதைய மோதல் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உணர்த்தும் வகையில், ஒரு சில குடியரசுக் கட்சியினர் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து இந்தத் தீர்மானத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
அமெரிக்கப் படைகளைப் போருக்கு அனுப்பும் அரசியலமைப்பு அதிகாரம் ஜனாதிபதியிடம் அன்றி, நாடாளுமன்றத்திடமே உள்ளது என இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது என குறிப்பிட்டுள்ள செனட் சபை உறுப்பினர்கள் ,ட்ரம்ப் போரில் இருந்து வெளியேறும் தெளிவான திட்டத்தை வகுக்காமல் விரோதப் போக்கை அதிகரித்துள்ளார் என விமர்சிக்கின்றனர்.
குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்ற போதிலும், இந்தத் தீர்மானம் பெரும் தடைகளை எதிர்கொள்கிறது.
இந்த தீர்மானத்திற்கு, இன்னும் முழு செனட் வாக்கெடுப்பு, குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம், மற்றும் எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதியின் வீட்டோவை (தடையை) மீறுவதற்கு இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது.
மே முதலாம் திகதியன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் பகைமை முடிவுக்கு வந்ததாக ட்ரம்ப் கூறி வருகிறார், மேலும் தனது நடவடிக்கைகள் ஜனாதிபதி அதிகாரத்திற்கு உட்பட்டவை என்றும் வாதிடுகிறார்.
இருப்பினும், அமெரிக்கப் படைகள் ஈரானிய துறைமுகங்களைத் தொடர்ந்து முற்றுகையிட்டு கப்பல் போக்குவரத்தைக் குறிவைத்து வருகின்றன, அதே நேரத்தில் ஈரான் ஹோர்முஸ் நீரிணைக்கான அணுகலைத் தடுத்து அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கியுள்ளது.
1973 ஆம் ஆண்டின் போர் அதிகாரச் சட்டத்தின் கீழ், ஒரு அமெரிக்க ஜனாதிபதி கொங்கிரஸின் அங்கீகாரத்தையோ அல்லது 30 நாள் நீடிப்பையோ கோருவதற்கு முன்பு 60 நாட்களுக்கு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க வாக்காளர்கள் போரை எதிர்க்கிறார்கள் என்று பொதுக் கருத்துக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன, மேலும் சட்ட வல்லுநர்கள் இது சர்வதேச சட்டத்திற்கு இணங்குகிறதா என்று கேள்வியை எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








