முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு கடுவலை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
வாக்குமூலம் அளிப்பதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் வீரவன்ச, இன்று காலை கைது செய்யப்பட்டார்.
பத்தரமுல்லையில் உள்ள தேசிய போர் நினைவிடம் அருகே பொலிஸ் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நேற்று ஆஜராகத் தவறிய வீரவங்சவுக்கு, இன்று தலங்கம பொலிஸ் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டதாக பொலிஸ் உறுதிப்படுத்தியது.
மே 18 அன்று, போர் வெற்றி நினைவு தின நிகழ்ச்சிக்கான ஒத்திகையின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தலைமையிலான குழுவினர் தேசிய போர் நினைவிடத்திற்குள் நுழைய முயன்றதைத் தொடர்ந்து, பத்தரமுல்லை பொலிஸ் அதிகாரிகளுக்கும் வீரவங்சவின் சகாக்களுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஒத்திகை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், அவ்விடத்தில் இருந்த அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் முன்னதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விமல் வீரவங்சவுடன் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த இருவருக்கும் கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, சந்தேக நபரான விமல் வீரவன்ச மற்றும் மற்றொரு சந்தேக நபரை தலா ரூ. 500,000 மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.







