வொஷிங்டனில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், லெபனானும் இஸ்ரேலும் நேற்று ஜூன் 3, புதன்கிழமை அன்று போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
இதற்கமைய இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த வேண்டும் எனவும் தெற்கு லிட்டானி பகுதியை லெபனான் இராணுவம் முழுமையாகக் கட்டுப்பாட்டில் எடுக்கும் அதேவேளை ஹிஸ்புல்லா வெளியேற வேண்டும் என்றும் ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.
இதேவேளை ஒரு விரிவான உடன்படிக்கையை எட்டும் நோக்கில், அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, ஜூன் 22 ஆம் திகதி இரு நாடுகளும் மீண்டும் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்த நிலையில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து இஸ்ரேலை எதிர்த்தது.பதிலுக்கு இஸ்ரேல், லெபனான் மீது நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உட்பட பலர் கொல்லப்பட்டிருந்தனர்.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே தாக்குதல்கள் தொடர்ந்தன.
போர் நிறுத்தத்திற்கு அமைய லெபனான் மீதான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்து வந்தது.அவை நிறுத்தப்படாத நிலையில் ஈரானின் தலையீட்டால் மோதல் தீவிரமடைந்திருந்தது.
இவ்வாறான சூழலிலேயே இந்த ஒப்பந்தம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அமைதி நீடிக்குமா என்பதை ஜூன் 22-ஆம்திகதி நடைபெறும் கூட்டமே தீர்மானிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.








