முன்னாள் இலங்கை கடற்படை அதிகாரி யோசித கனிஷ்க ராஜபக்ஷவின் கைது தொடர்பான காரணங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) விளக்கியுள்ளது.
இன்று (17) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் ஆணைக்குழு அவற்றை தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில்,கடற்படை கேடட்டாக இருந்த ராஜபக்ஷ, 2006 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் நிர்வாக பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டபோது, நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், அவர் பின்னர் பிரிட்டனில் உள்ள றோயல் கடற்படை கல்லூரியில் பயிற்சி பெறுவதற்கான சந்தர்ப்பம் அரச நிதியில் வழங்கப்பட்டதாகவும், அது நடைமுறையில் உள்ள ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி நடைமுறைகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.








