வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து,இது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் பாராளுமன்றத்தின் பொது நிதிக் குழு (COPF) அடுத்த வாரம் மத்திய வங்கி அதிகாரிகளிடம் வினவ உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக இலங்கையின் பிரபல ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பணச்சலவை மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தொடர்பான சட்டங்களை விவாதிப்பதற்காக கோப் குழு அடுத்த வாரம் கூடவுள்ளது.
இந்த நிலையில் கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டொக்டர் ஹர்ஷ டி சில்வா, ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு, கூட்டத்தில் “நிச்சயமாக” ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதியின் அறிக்கை மிகுந்த கவலைக்குரிய விடயமாகும், மேலும் அடுத்த வாரம் நாம் கூடும்போது இது நிச்சயமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்,” என அவர் கூறினார்.
இந்த வாரத் தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க, சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 300 பில்லியன் ரூபாய் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக ஏறத்தாழ 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட வருமானமும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்களில் அடங்கும் என்று அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.







