உலக வங்கி தனது சமீபத்திய வருமான பகுப்பாய்வு அறிக்கையில், இலங்கையை மீண்டும் ‘மேல் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக’ (Upper Middle Income Country) தரமுயர்த்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் இலங்கை 5% உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வளர்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது
2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, மூன்றே ஆண்டுகளில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார மீட்சியை இது வெளிப்படுத்தியுள்ளது.
தொழில்துறை, சுற்றுலாத்துறை மற்றும் நிதிச் சேவைகளின் வளர்ச்சி மற்றும் பரந்த அடிப்படையிலான பொருளாதார மீட்சி ஆகியவை இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக வங்கி, நாடுகளை நான்கு வருமானப் பிரிவுகளாகப் வகைப்படுத்துகின்றது.
அவை,உயர் வருமானம், மேல் நடுத்தர வருமானம், கீழ் நடுத்தர வருமானம் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் ஆகியவை ஆகும்.
இவை ஒரு நபருக்கான மொத்த தேசிய வருமானத்தின் (GNI per capita) அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படுகின்றன.
இந்த தரமுயர்வு, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிப் பாதையில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றத்திற்கான ஒரு குறியீடாகப் பார்க்கப்படுகிறது.
இந்த புதிய வகைப்பாடு ஜூன் 2027 வரை நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.








