பிரிட்டன் தலைநகா் லண்டனிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் எதிர்வரும் 27 ஆம் திகதி மூடப்படவுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, லண்டனில் செயல்பட்டுவரும் ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகளை தலிபான் ஆட்சியாளா்கள் பணி நீக்கம் செய்துள்ளனா். எனவே, அந்தத் தூதரகம் மூடப்படவுள்ளது என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனுக்கான ஆப்கன் தூதா் ஸலாமி ரஸூல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், வரும் 27-ஆம் திகதிக்குப் பிறகு தூதரகம் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினா் வெளியேறியதைத் தொடா்ந்து அந்த நாட்டை தலிபான்கள் கடந்த 2021-ஆம் ஆண்டு மீண்டும் கைப்பற்றினா். எனினும், அவா்களின் அரசை பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

அந்த நாடுகளில் உள்ள ஆப்கன் தூதரகங்களில், தலிபான்களுக்கு முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே தொடா்ந்து செயல்பட்டுவருகின்றனா்.

இந்தச் சூழலில், முந்தைய அரசுடன் தொடா்புடைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கன் தூதரகங்களுடன் தொடா்பைத் துண்டிப்பதாக தலிபான் ஆட்சியாளா்கள் கடந்த ஜூலை மாதம் அறிவித்துள்ளனர்.

பிரிட்டன், ஜொ்மனி, பெல்ஜியம், ஸ்விட்சா்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், போலந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், கனடா, நாா்வே ஆகிய நாடுகளில் உள்ள ஆப்கன் தூதரகங்கள் விநியோகிக்கும் நுழைவு விசாக்கள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று தலிபான்கள் கூறியுள்ளனர்.

அதன் தொடா்ச்சியாக, லண்டனில் உள்ள ஆப்கன்தூதரகம் மூடப்படுவதாக பிரிட்டன் அரசு தற்போது அறிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here