சிறிலங்கா கம்யூனிஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் டீ. வீரசிங்க உலக நாடுகளில் இடம்பெற்றுவரும் மோதல்கள் மற்றும் இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு புதிய லிபரல்வாத பொருளாதார கொள்கையே காரணமாகும் என தெரிவித்துள்ளார்.
சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவுக்கு ஆதரவளித்து சிறிலங்கா கம்யூனிஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று (12.09) கொழும்பில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எமது நாட்டு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீ்ள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. ஆனால் நாணய நிதியம் கடன் உதவி வழங்கும்போது எமது நாட்டின் முக்கிய வளங்களை இலக்குவைத்தே கடன் உதவி வழங்குகிறது. இதனால் எதிர்காலத்தில் எமது நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் அபாயம் இருக்கிறது. நாணய நிதியம் இவ்வாறான நிபந்தனையுடனே கடன் வழங்க இணக்கம் தெரிவிக்கிறது.
ஆனால் சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, இந்த நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதில்லை என்ற உறுதியை வழங்கி இருக்கிறார்.
மேலும் வரி வகைகள் அதிகரிக்கப்படுவதால் சாதாரண மக்களுக்கு தங்களின் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதேபோன்று சேவைக்கட்டணங்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கான விலை அதிகரிக்கப்படும்போது தொழிற்சாலைகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
அதனால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண சோசலிச பொருளாதார கொள்கையே தீர்வாகும். சோசலிச பொருளாதார கொள்கையின் அடிப்படையில் பொருளாார பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர அதற்கான வேலைத்திட்டங்களை அமைத்துள்ளார். அதனாலே இந்த தேர்தலில் சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி திலித் ஜயவீரவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது என தெரிவித்துள்ளார்.








