ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்காக பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(18) பெற்றோர்கள், பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யுமாறு அவர்கள் கோரிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் சிலர் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வந்தமையால் பொலிஸாரும் கலகத் தடுப்புப் பிரிவினரும் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அலவ்வ பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் ஒருவர் புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் உள்ள சில வினாக்களுக்கு நிகரான வினாக்கள் கொண்ட யூகத் வினாத்தாள் ஒன்றை பரீட்சைக்கு முன்னர் வெளியிட்டதாக குற்றம் சாற்றப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து, பல தரப்பில் இருந்து கிடைத்த முறைப்பாடுகளால், பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளையும் ஆரம்பித்தது. மேலும் இந்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் இலகுவாக எடுத்துக்கொண்டுள்ளார் எனவும் அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அந்த இடத்தில் இருந்த பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.








