புதிய அரசியலமைப்பில் தாங்கள் எதிர்பார்த்துள்ள மாற்றம் உள்வாங்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தேர்தல் வருகிறது ஒரு மாற்றத்திற்கான தேர்தல் என்று சொல்லப்படுகிறது.
அந்த மாற்றத்தின் ஆரம்பம் ஜனாதிபதித் தேர்தல் என்று ஜனாதிபதி தேர்தலைக் கூறுகிறார்கள்.
அது ஒரு வகையிலும் சரியானது தான், எமது நாட்டில் இரு கட்சி ஆட்சி என்று சொல்லப்படும் நிலையில் அந்த இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்த காலத்தில் ஒரு பாரிய மாற்றமாக மூன்றாம் தரப்பு இப்பொழுது ஆட்சியைப் பிடித்து இருக்கிறது.
அந்த மூன்றாம் தரப்பு யார் என்று நாங்கள் பார்த்தால் ஒரு தடவை அல்ல இரண்டு தடவைகள் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஆயுதம் எடுத்துப் போராடிய தரப்பினர்.
ஒரு மாற்றம் வேண்டும் என்ற நிலையில் இந்த பொறுப்பை ஒப்படைக்க மக்களுக்குக் கிடைத்தது தேசிய மக்கள் சக்தி தான்.
ஆனால் அவர்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம் இருக்கிறது என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.








