2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஷாபி சிஹாப்தீன் குற்றமற்றவர் என குருநாகல் நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
முறைப்பாடு செய்தவர்கள் தமது குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறியதாலும், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரிலும் குருநாகல் நீதவான் பந்துல குணரத்ன ஷாபி சிஹாப்தீனை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
2019 ஆம் ஆண்டு, குருநாகல் போதனா வைத்தியசாலையில் சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு டாக்டர் சிஹாப்தீன் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
பெண்களின் அனுமதியின்றி கருத்தடை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
கலாநிதி சிஹாப்தீன் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்ததாகவும், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து, குருநாகல் பிரதான நீதவான் முன்னிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.








