ஹபரணை – மின்னேரியா வீதியில் 7ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்த நபர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளன.
இன்று (29) காலை 11:00 மணியளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த விபத்தில் இ.போ.ச பேருந்தில் பயணித்த 12 பேரும், தனியார் பேருந்தில் பயணித்த 4 பேரும் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலை மற்றும் ஹபரணை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் இரு பேருந்துகளின் சாரதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்காவிலிருந்து சிறிபுர பிரதேசத்தில் இறுதிச் சடங்கு ஒன்றிற்காக பயணித்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதுடன், தனியார் பேரூந்து சாரதியின் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








