நாடளாவிய ரீதியில் தேசிய விலங்குகள் கணக்கெடுப்பானது விவசாய, கால்நடைவள அமைச்சினால் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் 90 சதவீதம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இன்று காலை 8 மணிமுதல் 8.05ற்குள் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பொதுமக்கள் தங்களின் வீட்டுத்தோட்டம், காணி, வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களை அவதானித்து அங்குள்ள குரங்குகள், மரஅணில் மற்றும் மயில்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து பதிவு செய்யவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பொதுமக்கள், குறித்த தகவல்களை தங்களுக்குரிய பிரதேச செயலகம், கிராம உத்தியோகத்தர் அலுவலர்களிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த கணக்கெடுப்பு தாளில் தகவல்களை சமர்ப்பிக்கும் நபரின் பெயர், முகவரி மற்றும் கையொப்பம் என்பவற்றை குறிப்பிடுமாறும் விவசாய, கால்நடைவள அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த கணக்கெடுப்பு தொடர்பில் கருத்துரைத்துள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் ஆயிரக்கணக்கில் குரங்குகள் உள்ளதாகவும் அவற்றை கணக்கெடுப்பது சாத்தியமற்ற விடயம் எனவும் குறிப்பிடுகின்றன.
குறித்த குரங்குகள் வீட்டில் மனிதர்கள் இல்லாத போதே வருகின்றன அந்த சந்தர்ப்பங்களில் எவ்வாறு கணக்கெடுப்பை நடத்த முடியும் எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.








